கரப்பந்தாட்ட தேசிய அணியில் விளையாடிய மகாஜன மங்கை
1994.03.07 இல் மகாதனை தெல்லிப்பழையில் பிறந்த புகழரசி பாலச்சந்திரன் தரம் 1 தொடக்கம் மகாஜனக் கல்லூரியில் கற்று வருகிறார், கடந்த வருடம் (2010) டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றியுள்ள இவர் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்.
புகழரசி மகாஜனாவில் 2007ஆம் ஆண்டு 15 வயதுப் பிரிவு கரப்பந்தாட்ட அணியில் இணைந்து கொண்டதிலிருந்து தொடர்ந்து கரப்பந்தாட்டத்தில் பங்குபற்றி வருகிறார். தொடர்ந்து 2008 ,2009 ஆம் ஆண்டுகளில் இவர் இடம்பெற்ற கல்லூரியின் 17வயதுகரப்பந்தாட்ட அணி கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் வரை முதலாமிடம் பெற்று தேசியமட்டப் போட்டியில் கலந்துகொண்டது.
இவர் கடந்த வருடம் (2010) DSI நிறுவனத்தால் யாழ்.மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை தேசிய கனிஷ்ட மட்ட (19வயது) பயிற்சி முகாமில் கலந்துகொண்டார்.தேசிய மட்ட பயிற்சி முகாமில் தனது திறமைகளை மேலும் வலுப்படுத்தி தேசிய கனிஷ்ட மகளிர் அணியில் இடம்பெற்று கல்லூரியின் புகழை ஓங்கச் செய்தார். தேசிய கனிஷ்ட மகளிர் அணியில் இடம்பெற்ற இவர் 2010 செப்ரெம்பர் மாதம் வியட்னாமில் இடம்பெற்ற ஆசிய மட்ட கனிஷ்ட மகளிர் கரப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.இவர் ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் சீனா, ஜப்பான், ஈரான், கொரியா, அவுஸ்ரேலியா, ஹெங்கொங், வியட்னாம், தாய்வான், நியூசிலாந்து, கசகத்தான், இந்தோனேசியா, பீயா ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் விளையாடியுள்ளார்.
புகழரசி பாடசாலை மற்றும் கழகம் சார்பாக தேசிய மட்டத்தில் நடைபெற்ற மஞ்சிக்கிண்ணம், DSI கிண்ணம், டயலொக் கிண்ணம், ஜனாதிபதி தங்கக் கிண்ணம், தேசத்தின் மகுடக் கிண்ணம் என 10இற்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இவரது பயிற்றுவிப்பாளராக கல்லூரியின் பழைய மாணவனும் உடற்கல்வி ஆசிரியருமான சி.கமலமோகன் அவர்களும் பழைய மாணவனும் கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமான சி.தயாளபாலன் அவர்களும் விளங்குகின்றனர். இவர்களது அயராத உழைப்பினால்தான் புகழரசி தேசிய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரப்பந்தட்டத்தொடு மட்டும் அல்லாது மகாஜனாவின் வலைப்பந்தாட்ட அணியிலும் விளையாடி வருகிறார். அத்தோடு மெய்வல்லுனர் போட்டியிலும் பங்குபற்றி வருகிறார்.
இவ்வருடம் 19வயதுப் பிரிவு அணியில் விளையாடியுள்ளார்
புகழரசியின் இலக்காக தேசிய அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாடுவதே ஆகும்.
புகழரசியின் வெற்றிகள் மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
கரப்பந்து பெண்கள்
மாகாண மட்டம் முதலாம் இடம் கரப்பந்தாட்டம் 19 வயதின் கீழ் பெண்கள்
மாகாண மட்டம் இரண்டாம் இடம் கரப்பந்தாட்டம் 17 வயதின் கீழ் பெண்கள்
வெல்லுக மகாஜன மாதா