தேசிய மட்டக் கோலூன்றிப் பாய்தலில் வென்ற மகாஜன வீரன்
1991.11.02 இல் அளவெட்டியில் பிறந்த தேவராசா மோகுநாத், தரம் 1 தொடக்கம் மகாஜனக் கல்லூரியில் கற்று வருகிறார். 2010 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியூள்ளார். (கலைப்பிரிவு) மீண்டும் 2011 ஆம் ஆண்டு இரண்டாந் தடவையாகப் பரீட்சையில் தோற்றவுள்ளார்.
12வயது தொடக்கம் இவர் கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சிக்காகப் பயிற்சி பெறத் தொடங்கினார். ஆரம்பத்தில் கல்லூரியில் கோல் இல்லாத நிலையில் மூங்கில் தடி மூலம் தான் பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் 17வயதுப் பிரிவில் முதல் முதல் போட்டியில் பங்குபெற்றத் தொடங்கினார். இவர் பங்குபெற்றத் தொடங்கிய காலப்பகுதியில் (2006 ஆம் ஆண்டு) 17வயதுப் பிரிவிலிருந்து தான் கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சி பாடசாலை மட்டப் போட்டிகளில் இருந்தது. 2008 ஆம் ஆண்டு 19வயதுப் பிரிவிலிருந்து பாடசாலை,கோட்டம்,வலயம், மாவட்டம், மாகாணப் போட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களைப் பெற்று வருகின்றார்.
மோகுநாத் 2008ஆம் ஆண்டு 19 வயதுப் பிரிவில் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி 6ஆம் இடத்தைப் பெற்றார். தொடர்ந்து 2009ஆம் ஆண்டு 19 வயதுப் பிரிவில் தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி 4ஆம் இடத்தைப் பெற்றதோடு நிறச் சான்றிதழையும் பெற்றார்.
அத்தோடு மட்டும் நின்று விடாது மகாஜனாவின் உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட அணிகளிலும் விளையாடியுள்ளார். குறிப்பாக 2008 ஆம் ஆண்டு யாழ்மாவட்டச் சாம்பியன் பட்டத்தை வென்ற மகாஜன 19வயது உதைபந்தாட்ட அணியில் விளையாடியுள்ளார்.
மகாஜனக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராகக் கடமையாற்றும் திரு.க.மயில்வாகனம் அவர்கள்தான் இவரை கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சிக்குக் கொண்டுவந்தவர். 2009ஆம் ஆண்டு இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்பட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுப் பிரிவில் பங்கு பற்றி 3.70 மீற்றர் உயரத்தைத் தாண்டி தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கத்தை பெற்றார். பின்னர் மீண்டும் 2010ஆம் ஆண்டு இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 21 வயதுப் பிரிவு கோலூன்றிப் பாய்தலில் 3.90 மீற்றர் உயரத்தைத் தாண்டி தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தனக்கும் மகாஜன மாதாவுக்கும் பெருமை சேர்த்தார்.
இவரது பயிற்றுவிப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்களான திரு.க.மயில்வாகனம், திரு.சி.கமலமோகன் ஆகியோர் செயற்படுகின்றனர். பயிற்றுவிப்பாளர் திரு.செ.ரமணன் அவர்களும் இவருக்கு அவ்வப்போது மேலதிக பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.
செல்வன் மோகுநாத்தின் முதலாவது இலக்கு தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெறுவதாகும். அது நிறைவேறிவிட்டது. அடுத்த இலக்கு தேசிய மட்டத்தில் சாதனை நிலைநாட்டுவதாகும். இவர் இவ் வருடமும் 21வயதுப் பிரிவில் பாடசாலைமட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றார். அப்போட்டியில் சாதனை புரிந்து கல்லூரியின் புகழை மேலோங்கச் செய்வதற்காக தொடர் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
செல்வன் மோகுநாத்தின் சாதனைகள் இன்னும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
வெல்லுக மகாஜன மாதா