கண்ணீர் அஞ்சலி
திரு.இரத்தினேஸ்வரஐயர்
இவர் மகாஜனாவின் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரும், மகாஜனக் கல்லூரியின் நீண்ட கால ஆசிரியரும், கல்லூரியில் பல பொறுப்புகளை வகித்து பின்னர் அதிபராக இருந்து ஒய்வு பெற்றவரும், எல்லோரதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தவருமான திரு இரத்தினேஸ்வர ஐயர் அவர்கள் கடந்த வியாழக்கிழமை காலை (24.05.2012) தெல்லிப்பளையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று (25.05.2012) தெல்லிப்பளையில் நடைபெறுகிறது.
இவர் மகாஜனாவில் உயர் கல்வியை நிறைவு செய்தபின் இந்தியா சென்று தனது கல்வியைத் தொடர்ந்து கலைமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். 1950 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் கல்லூரியின் ஒரு ஆசிரியராக நியமனம் பெற்றார்.ஆரம்பத்தில் உயர் வகுப்புகளுக்கு அளவையியல் பாடத்தையும் ஏனைய வகுப்புகளுக்கு வரலாறு ,குடியியல் பாடங்களையும் கற்பித்தார். இவர் அதிபர் திரு பொ.கனகசபாபதி அவர்கள் காலத்தில் உப அதிபராக பதவி உயர்வு பெற்று பின் பதில் அதிபராகக் கடமையாற்றி தொடர்ந்து அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கல்வியில் கூடிய அக்கறையும், செயற்பாடும் கொண்ட இவர், கல்வி சாரா விடங்களில் அதிக காலம் நேரம் பயன் படுத்துவதில் கட்டுப்பாடு கொண்டிருந்தார். கல்வியில்தான் மாணவர்களின் வாழ்க்கை அதிகம் தங்கியிருக்கிறதென்பதை முதன்மையாக கருதியதுடன், கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு எவ்விதமான தடங்களும் எவ்வழியாலும் நிகழக்கூடாதென்பதில் தன் காலத்தில் கவனமாக இருந்தார்.
இந்த அறிவித்தலை பழைய மாணவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் குடும்பத் துயரில் நாங்களும் கலந்து கொண்டு, எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் யாவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம். .
***********************************************************************************************
*********************************************************************************