மகாஜனக் கல்லூரியில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி அம்பாள்
சமேத ஆனந்த நடராசர் ஆலயம்
சைவ மாணவர் சைவச் சூழலிலேயே தமது கல்வியைக் கற்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தால் உந்தப்பற்ற யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் சைவ மக்களுக்கு ஓர் விஞ்ஞாபனம் விடுத்தார், “வசதி படைத்த பெரிய மனிதர்கள் தங்கள் தங்கள் ஊரிலேயே சைவப் பாடசாலைகளை ஸ்தாபிக்க வேண்டும்” என்பதே அந்த விஞ்ஞாபனம் ஆகும். அதனைத்தொடர்ந்து குடாநாட்டில் பல பாகங்களிலும் சைவப் பாடசாலைகள் பல தோன்றின. குறிப்பாக யாழ்ப்பாணம் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் பல பாடசாலைகளை அமைத்தனர்.
தெல்லிப்பழையைச் சார்ந்த கல்விக் கலைஞன் பாவலர் தெ.துரையப்பாபிள்ளை அவர்கள் தன் முயற்சியால் 1910 ஆம் ஆண்டில் மகாஜனக் கல்லூரியை ஆரம்பித்தார். தானே அப்பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் சிறப்பாகப் பணி புரிந்தார். மேலும் சில ஆசிரியர்களைச் சேர்த்துப் பாடசாலையை உயர்த்தினார். அவர் அமரத்துவம் ஏய்த, பாவலரின் உறவினரும் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் ஆகிய திரு.கா.சின்னப்பா அவர்கள் அதிபர் பதவியை ஏற்று இனிது நடத்தி வந்தார். அதன் பின்னர் மகாஜனாவின் சிற்பி எனப் போற்றப்படுபவரும் ஸ்தாபகரின் மூத்த மைந்தனுமாகிய திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் கல்லூரியைப் பொறுப்பேற்று அதிபராக இருந்து அரும்பணி புரிந்தார்.
அதிபர் ஜயரத்தினம் அவர்களின் காலம் கல்லூரியின் பொற்காலம் எனப் போற்றப்படும் அளவிற்கு நாளொரு வண்ணமும் பொழுதொரு வளர்ச்சியுமாகக் கல்லூரி வளர்ந்தது. தகுதியான ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து ஆசிரியர்களாக நியமித்தார். விடுதிச்சாலை அமைக்கப்பெற்றது, அதனால் மாணவர் தொகை பெருகியது, கல்லூரி வளர்ந்தது, வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள், தொழிற் கூடங்கள் கலைப்பாடங்களின் தனித்தனிக்கூடங்கள் அமைக்கப் பெற்றன. அத்துடன் மாணவர்களின் வழிபாட்டிற்காக ஓர் ஆலயம் அமைத்தல் சகல வசதிகளுடன் கூடிய மண்டபம், நூலகம் போன்றவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது. அதன் நோக்கமாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி வந்தார்.
1960 ஆம் ஆண்டில் கல்லூரியின் பொன்விழா கொண்டாடத் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை பிரதான மண்டபம் அமைத்தலும் ஆலயம் அமைத்தலும் ஆகும். அக்காலத்தில் மகாஜனக் கல்லூரியில் கற்பித்தவரும் சைவ நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளருமாகிய ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர் திரு.செ.சின்னத்துரை அவர்களின் முயற்சியால் கல்லூரி வளாகத்தின் வடகிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய நிலையில் அமைக்கப்பெற்ற ஆலயத்தில் விநாயகர், ஐம்பொன்னினால் அமைக்கபெற்ற சிவகாமி சமேத ஆனந்தநடராசர் விக்கிரகங்கள் உருவாகப் பெற்று மாவிட்டபுரத்தைச் சார்ந்த பிரம்மஸ்ரீ ஐ.வைத்தியநாதக்குருக்கள் தலைமையில் 1910 -10 -30 ஆம் திகதி கும்பாபிடேகம் நிறைவேற்றப்பெற்றது. தொடர்ந்து நடராசப் பெருமானுக்குரிய ஆறு அபிஷேகங்களும் சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. ஆனி உத்தரம், மார்கழித் திருவாதிரை ஆகிய இரு தினங்களும் அம்பாள் சமேத நடராசப்பெருமான் வீதி வலம் வருவது சிறப்பாக இடம்பெறும்.
1976-09-06 இல் புனராவர்த்தன கும்பாபிஷேகம் பிரம்மஸ்ரீ ஐ.வைத்தியநாதக்குருக்கள் தலைமையில் கல்லூரிப் பழைய மாணவர் திரு.ந.கனகஞ்சிதன் முயற்சியால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
1982 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் ஐம்பொன்னினால் உருவாக்கப்பெற்ற மணிவாசகப் பெருமானின் உருவம் திரு.செல்லப்பா இராசரத்தினம் அவர்களின் முயற்சியால் ஐ.வைத்தியநாதக்குருக்கள் அவர்களின் தலமையில் கிரியைகள் நிகழ்த்தப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1985-07-02 இல் மீண்டும் புனராவர்த்தன மகாகும்பாபிஷேகம் [1984 ஆம் ஆண்டு க.பொ.த.(சா.த) மாணவர்களின் முயற்சியால் வகுப்பு மாணவ தலைவன் பொ.கேதீஸ்வரன் தலமையில்]அதே குருக்கள் தலமையில் சிறப்பாக நடை பெற்றது.
கல்லூரி ஆலய பூசகர்களாக மாவிட்டபுரத்தைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ ஐ.வைத்தியநாதக்குருக்கள் அவரைத்தொடர்ந்து அவரின் மைந்தர்கள் பிரம்மஸ்ரீ வை.சுப்பிரமணியக்குருக்கள், பிரம்மஸ்ரீ வை.ஐயாச்சாமிசர்மா ஆகியோர் பணியாற்றி வந்தனர். சைவ சமய நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக ஆசிரியர்கள் திரு.செ.சின்னத்துரை, அவரைத்தொடர்ந்து பிரம்மஸ்ரீ து.சுந்தரமூர்த்தி ஐயா, அவரைத்தொடர்ந்து திரு.ச.விநாயகரத்தினம் ஆகியோர் பணியாற்றினார். பெரும் பொருளாளர்களாக ஆசிரியர்கள் திரு.கா.இரத்தினசிங்கம் அவர்களைத் தொடர்ந்து திரு.செ.கதிரேசர்பிள்ளை அவரைத்தொடர்ந்து திரு.சி.கயிலைமகான் ஆகியோர் பணிபுரிந்தனர்.
கல்லூரி ஆலயத்தில் பன்னிரு மாதப் பிறப்புகளும் தை,சித்திரை மாதப்பிறப்புகளில் பொங்கல் பொங்கிப் படித்தும், நவராத்திரி ஒன்பது தினங்களும் காலை, மாலை, இருவேளைகளிலும் விசேட பூசைகளும், நிறுவியவர் நினைவுநாள் , ஜயரத்தினம் நினைவுநாள் ஆகிய தினங்களில் விசேட பூஜைகளும் மகாசிவராத்திரி தினத்தில் நான்கு சாமப் பூசைகளும் காலையில் சமய தீட்சை பெறும் நிகழ்ச்சியும் மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூசையன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் பகல் மகேஸ்வர பூசையும் சிறப்பாக இடம்பெற்றன. சமய குரவர் குருபூசைகளும் சந்தானகுரவர் பூசைகளும் கார்த்திகை சோமவாரங்கள் தோறும் விசேட பூசைகளும் இடம் பெற்றன.கார்த்திகை தீபத் திருநாளன்று இரவு கல்லூரி வளாகத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆலயத்தின் மேற்குப் பக்கத்தறையில் சைவ வளர்ச்சிக்கழக நூலகம் அமைக்கபெற்றது. மகாஜன சைவமஞ்சரி என்னும் கையெழுத்துப் பத்திரிகையும் மாதங்கள் தோறும் வெளியிடப்பெற்றன.
தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சர ஆலயத்தில் 1955ஆம் ஆண்டு தொடக்கம் அலங்காரத் திருவிழாவில் ஐந்தாம் நாள் பகலும் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் மகோற்சவத்தின் ஐந்தாம் நாள் பகல் திருவிழாவும் சிறப்பாக நடாத்தப்பெற்று வருகின்றது.
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகோற்சவத் திருவிழாவின் 17ஆம் திருவிழா பகலும் இரவும் எங்கள் கல்லூரியின் உபயமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
எமது கல்லூரிக்கே உரிய தனித்துவமான நிகழ்வுகளாக காலையில் பிரார்த்தனைக்கு மாணவர்கள் வகுப்பறையில் ஒன்றுகூடி வரிசையாகச் செல்லும் போது “நிலைபெறுமா றெண்ணுதியே” என்ற திருத்தாண்டகமும் திருவங்க மாலையும் ஓதப்பெற்று பூசை வழிபாடுகள் இடம் பெறும். மாவிட்டபுரம் மாலைத் திருவிழாவில் ஒவொரு வகுப்பு மாணவர்களும் தனித்தனியாக மாவிளக்குச் செய்யும் நிகழ்ச்சியும் முக்கியமானவை. திருக்கேதீச்சரத் திருவிழாவில் எமது கல்லூரித் திருவிழாவிற்காக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பெருந்தொகையினராகச் செல்வது வழமையான செயற்பாடாகும்.
1990க்குப் பின் அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வுகள், 1992 புரட்டாதிக்குப் பின் முற்றான இடப்பெயர்வு ஏற்பட்ட போதும் சிவகாமி சமேத ஆனந்த நடேசர் தன் இருக்கையிலிருந்து இடம் பெயரவேயில்லை என்பது ஆலயத்தின் தனிச் சிறப்பு. 1999 இல் மீண்டும் பாடசாலை தன் மண்ணில் நிரந்தரமாகத் தொழிற்படத் தொடங்க, பூசைகள் வழிபாடுகள் ஆரம்பமானது. நடேசப்பெருமான் ஆலய அமைவு இரு புறங்களிலும் வகுப்பறைகளைக் கொண்டிருந்தது. நாட்டின் தொடர் அசாதாரண சூழலால் வகுப்பறைகள் முற்று முழுதாக சேதமடையத் தொடங்கி விட்டது. அத்துடன் ஆலயம் புனருத்தாரணம் செய்யவேண்டிய கட்டாய நிலையும் தோன்றியது.
2007 இல் பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்படத் தொடங்க ஆலயத்தின் அருகிலுள்ள வகுப்பறைகள் முற்றாக அகற்றப்பட ஆலயம், சுற்றுச்சுவர் முட்பக்கக் கூரை அகற்றப்பட்டது. தொடர்ந்து புனரமைப்புச் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப் பட்டு இரு வருடங்கள் தாமதம் ஏற்பட்டு 2009 சித்திரை மாதம் 16ஆம் திகதி ஆலய பிரதமகுரு இரத்தினமகாலிங்கக்குருக்கள் முன்னின்று நடாத்த புனருத்தாரண அத்திவாரம் இடப்பட்டது. இச் செயற்றிட்டம் பாடசாலை மேம்பாட்டு குழுவினரால் உரிய முறையில் வலயக் கல்விப்பணிப்பாளர், பாடசாலை வேலைகள் பொறியியலாளர் ஆகியோரிடம் அனுமதி பெற்று மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பமானது.
பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் ஆலய புனருத்தாரணம், மணிகோபுர வேலைகள் ஆரம்பிக்கப் பட்டு 14 -07 -2010 பாலஸ்நாபனம் செய்யப்பட்டு மீதி வேலைகள் முடிக்கப்பட்டது. அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்பில் 12-09-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 7.26 முதல் 8.26 வரையுள்ள கன்னி லக்கின சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டா பிரதமகுரு ஆகம சிவாச்சாரிய திலகம் இரத்தினமகாலிங்கக் குருக்களால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பன்னிரண்டு தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 23-09-2010 வியாழக்கிழமை சங்காபிஷேகமும் இறைவன் திருவருளால் இனிது நிறைவெய்தியது.
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்“